சில நாட்களுக்கு முன்னர் தட்ஸ்தமிழ்.காம் வலைத்தளத்தில் சென்னை மாநகர காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவின் திறமையான செயல்பாட்டை இந்த செய்தியில் படித்தேன். நிஜமாகவே சென்னை சைபர்கிரைம் பிரிவு பிரமாதமாக செயல்படுகிறது. இதை நான் நேரடியாக அனுபவித்துள்ளேன்.
கடந்த மே மாதம் நான் கோடை விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். நான் இங்கு தினம் பயன்படுத்தும் செல்ஃபோனையே புது சிம்கார்ட் போட்டு உபயோகித்தேன்.
ஒரு மாலை மேற்கு அண்ணாநகரில் என் கல்லூரி நன்பனுடன் கங்கா ஸ்வீட்சில் ஏதோ சாட் வகைகள் நன்றாக கபளீகரம் செய்துவிட்டு நன்பனின் வீட்டிற்கு சென்றேன். நன்பன் வீட்டில் காலடி வைத்ததும்தான் ஸ்வீட் கடையில் செல்ஃபோனை மறந்து விட்டுவந்தது உறைத்தது. உடனே கடைக்கு ஓடினால் அதற்குள் அதை யாரோ லவட்டிவிட்டார்கள். கடையிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை, அவர்களையும் குறை சொல்லமுடியாது. செல்ஃபோனுக்கு டையல் செய்தால் மணி அடித்தது ஆனால் யாரும் எடுக்கவில்லை. அவ்வளவுதான் செல்ஃபோன் இனி கிடைக்காது, என் தொடர்புகள் பொக்கிஷம் எல்லாம் அழிந்தது என்று நினைத்தேன். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமென்று கடைக்கு எதிரேயே உள்ள திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். அங்கிருந்த ஏட்டு என்னை மேலும்கீழும் பார்த்துவிட்டு "என்னப்பா செல்ஃபோனெல்லாம் தொலைந்தால் கிடைக்குமா" என்றார். பொதுவாக ஒரு குழந்தையை தொலைத்தாலே கண்டுபிடிப்பது கஷ்டம், செல்ஃபோன் எம்மாத்திரம்.
ஆனால் பாருங்கள் பெரியவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களே "தம்பியுடையான் படைக்கஞ்சான்". வக்கீலுக்கு படிக்கும் என் தம்பியோ தனக்கு தெரிந்த ஒரு சைபர்கிரைம் இன்ஸ்பெக்டரிடம் பேசி ஒரே நாளில் கண்டுபிடித்து தருகிறேன் என்றான். அவன் சொன்னமாதிரியே மறுநாளே என் செல்ஃபோனும் கிடைத்தது. நம்பமுடிகிறதா?
இந்த சைபர்கிரைம் பிரிவிடம் செல்ஃபோன்களுக்கு ஒருவித விசேஷ கால் செய்யும் வசதியிருக்கிறது. இந்த விசெஷ கால் வந்தால் செல்ஃபோனில் எமர்ஜென்சி என்று வரும். முதலில் சைபர்கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் என் செல்ஃபோனிற்கு அந்த விசேஷ கால் செய்தார். எமர்ஜென்சி என்று வருவதுகண்டு செல்ஃபோனை அபகரித்த நபர் தெரியாமல் எடுத்து ஹலோ என்றிருக்கிறார். இதை இன்ஸ்பெக்டர் பதிவு செய்துவிட்டார். அடுத்து என் செல்ஃபோனிலிருந்து அன்று மாலை செய்யப்பட்ட கால்கள் பட்டியலை பார்த்தார். என் செல்ஃபோனை அபகரித்த நபர் என் ஃபோனின் நம்பர் என்ன என்று அறிந்துகொள்ள தன்னுடைய போனுக்கே சில கால்கள் செய்திருக்கிறான். இந்த இன்ஸ்பெக்டர் வரிசையாக என் செல்ஃபோனிலிருந்து காணாமல்சென்ற பிறகு கால் செய்யப்பட்ட என்கள் ஒவ்வொன்றாக டையல் செய்தார். அப்படி ஒரு காலில் எமெர்ஜென்சி காலுக்கு ஹலொ சொன்ன அதேகுரல் மீண்டும் பதிலளித்தது. திருடன் அகப்பட்டுக்கொண்டான். உடனே அந்த நபரின் ஃபோன் நம்பரை கண்டுபிடித்தார். பின் BSNL'இடமிருந்து அந்த நபரின் ஜாதகத்தையே சேகரித்தார். பின் அந்த நபரை ஃபோனில் மறுபடியும் கூப்பிட்டு உடனே என் செல்ஃபோனை உரியவரிடம் சேர்க்காவிட்டால் கைது செய்வேன் என்று எச்சரித்தார். என் செல்ஃபோனை அபகரித்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வக்கீல். போலீசின் எச்சரிக்கை கேட்டவுடனே அவருக்கு கதி கலங்கிவிட்டது. அடுத்த நிமிடமே என் வீட்டிற்கு அவர் ஃபோன் செய்து என் வீட்டிற்கே வந்து ஃபோனை திருப்பிதருவதாக சொன்னார். ஆனால் நானே நேரில் சென்று வாங்கிக்கொண்டென். அந்த இன்ஸ்பெக்டருக்கு தம்பி மூலமாக கோடானுகோடி நன்றிகளையும் தெரிவித்தேன்.
சென்னை மாநகர காவலின் சைபர்கிரைம் பிரிவு இவ்வாறாக என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர்களின் தேர்ச்சி எனக்கு பிரமிப்பாக உள்ளது. அவர்களுக்கு மறுபடியும் ஒரு சபாஷ்.