January 12, 2006

என் பெயர் ராமசேஷன்


என் பெயர் ராமசேஷன்

ஆதவன்

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 200.
டிசம்பர் 2003, இரண்டாம் பதிப்பு.
விலை: ரூ.100
ISBN: 81-88641-18-9



நேற்றைக்குதான் முதன்முறை படித்தேன். எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது. புத்தகத்தை பற்றி நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. என் வாசிப்பின் தொடர்பாக சில கருத்துகள்:
  1. ஆதவன் அவர்களின் படைப்புக்களை பற்றி அங்குமிங்கும் கேள்விப்பட்டாலும், மதி, இரா.மு & குழுவினர் நடத்திய புத்தகவாசகம்தான் என்னை இந்நூல் படிக்கத் தூண்டியது. மீனாக்ஸ், இரா.மு, மதிக்கு நன்றி.
  2. இந்த புதினத்தை படித்தவுடன் ஏனோ அய்ன் ராண்டின் ஃபவுண்டெய்ன் ஹேட் [Ayn Rand's Fountain Head] ஞாபகத்திற்கு வருகிறது.
  3. படிக்கும் பொழுது என்னை ஆச்சரியப் படுத்திய ஒரு விஷயம் - 1980'ல் எழுதியது என்றாலும் இன்றும் இந்த புதினத்தில் வரும் சில விவரங்கள், நையாண்டிகள் பொருந்துகின்றன. உ-ம்: ..."என்ன சொல்வதென்று தெரியவில்லை." "சொல்வதற்கு என்ன இருக்கிறது." "என்னவென்று சொல்வது நான்" என்று இப்படி ஏதேதோ (செய்திப் பத்திரிக்கை நிருபர்கள், ரேடியோ, டெலிவிஷன் நிருபர்கள் ஆகியோர் முன்னிலையில் 'மத்திய கிழக்கு' நிலைமை பற்றிக் கேட்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிபோல) பீடிகை வாக்கியங்கள் உதிர்த்தவாறிருந்தாரே தவிர ....
  4. நல்ல ஹாஸ்யம், கதைமாந்தர்களின் சுயவிசாரங்கள், வித்தியாசமான நடை + விவரனை ஆகியவை என்னை கவர்ந்த அம்சங்கள்.
படித்ததில்லை என்றால் கண்டிப்பாக படியுங்கள். விகடனில் கதாவிலாசத்தில் ஆதவனின் அறிமுகம்.

[புத்தகத்தை எனக்காக இந்தியாவிலிருந்து தருவித்த நன்பன் மும்மூர்த்திக்கு கடமைப்பட்டுள்ளேன்.]


January 06, 2006

2006: அடை ஆண்டு

அன்று மாலை ஞாயிற்றுக்கிழமை போல் அமைதியாக இருந்தது. இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்யலாமென்று மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மதியம் பிரெட் சாண்ட்விச்சில் ஓடியது. சாதம், சாம்பார் வேண்டாம். ஏதாவது சிற்றுண்டி செய்யலாம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். மேலே வேறு யோசனையின்றி அடைக்கு ஊறப்போட்டேன். அப்படியே நினைவுகளையும் கொஞ்சம் ஆறப்போட்டேன்.

கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் ஒன்று புலப்படுகிறது, சிற்றுண்டிகளில் இந்த அடைக்கு நாம் அதற்குண்டான மரியாதையை கொடுப்பதில்லையோ. சற்று இவைகளைப் பாருங்களேன்.
"அம்மா நாளைக்கு காலை சீக்கிரம் கிளம்பனும்".
"சரிடா இட்லி பண்ணிடறேன்" - அம்மா
"என்னங்க சாயங்காலம் வர லேட்டாகும் தோசை மாவு ஃபிரிட்ஜில இருக்கு, பார்த்துக்கங்க..."

எப்போதும் அவசரத்திற்கு இட்லி, [அரைத்த] தோசையை தான் உதவிக்கழைக்கிறோம். இல்லை உடனடி தேவையாக இருந்தால் கரைத்த தோசை, உப்புமாதான். தெருவோர கடைகளில் கூட இட்லி தோசைதான் விற்கிறார்கள். இன்னும் இட்லி, தோசை, உப்புமா போன்ற திடீர் மிக்ஸ்கள் கிடைக்கின்றன் ஆனால் அடை மிக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறோமா? பொதுவாக அடை எப்போதும் சட்டென்று தோன்றும் தீர்வாக இருப்பதில்லை. இதற்கான காரணம்தான் என்ன? இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இதற்கு அடையின் அடக்கமே காரணமென்று தோன்றுகிறது!

திருதராஷ்டிரன் சபையில் பீஷ்மரைப் போல் சிற்றுண்டிகளில் அடை. எல்லோரையும்விட வல்லவர் ஆனாலும் ஒரு அவையடக்கம். அடையில் அரிசிக்கு சமமாக அனைத்து பருப்புகளும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் [தமிழ்ல என்னங்க?] புரதச்சத்து எல்லாம் வேண்டிய அளவு இருக்கிறது. ஊரப்போட்ட இரண்டு மணி நேரத்தில் அரைத்து வார்க்க அடைமாவு தயார். சாதாரணமாக ஒருவர் இரண்டு அல்லது மூன்று அடை உண்டாலே வயிறு நிரைந்துவிடும். இப்படி ஒரு முழுமையான பண்டமாக இருந்தாலும் அவசர யுகத்தில் தோசை இட்லியுடன் முண்டியடிக்காமல் ஒரு அடக்கம் [அதாங்க அவையடக்கம்] காக்கிறது. இதுவே இதன் சிறப்புமாகும்.

ஊறவைத்த ஒரு குவளை அரிசிக்கு ஒரு குவளை ஊறவைத்த பருப்பு [துவரை+கடலை+கொஞ்சம் உளுந்து] மிளகாய் வற்றல்கள், கொஞ்சம் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்த மாவில் இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து சற்று மிதமான தீயில் வார்த்தெடுத்தால் அடை தயார் [செய்முறைகள் இங்கே] . இதில் கொஞ்சம் கொண்டகடலை சேர்த்தரைப்பதும் ஒரு வகை. நவீன உனவுப் பதார்த்தங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பீட்சாவை போன்று அடையும் பல டாப்பிங்குகளில்[toppings] செய்யலாம். முருங்கைக்கீரை அல்லது கைக்கெட்டும் சில கீரைவகைகள், முட்டைகோஸ், காரெட், வெங்காயம் போன்றவை பொதுவாக பயன்படுத்தபடும் டாப்பிங்காகும். அடை வார்க்கும் கல்லில் ஒரு கரண்டி மாவைவிட்டு தோராயமாக வட்டவடிவில் அல்லது டெட்டிபேர் [teddy bear] போன்று தங்கள் கற்பனைக்கு எட்டும் வடிவில் தட்டி இந்த டாப்பிங் ஏதேனும் மேலே தூவவும். அடையின் ஓரத்தை சுற்றி எண்ணை/நெய் விடவும். அடை நன்றாக வேக நடுவிலோ அல்லது தங்களின் வடிவகணித ஞானத்தை பயன்படுத்தி வேறு தோதான இடங்களில் சில ஓட்டைகள் ஏற்படுத்தி ஓரிரு முட்டை எண்ணை விடவும். அடையின் மேற்பகுதிவரை வெந்தபின் அடிப்பகுதி நன்றாக சிவந்தவுடன் திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்களில் இந்தப் பக்கமும் சிவந்தவுடன் எடுத்தால் அடை சாப்பிட தயார். தயாரான அடை கீழே லா.ச.ரா வர்ணிப்பதுபோல் இருந்தால் பிரமாதம். அடையுடன் கூட சாப்பிட வெறும் வெல்லம் அல்லது மிளகாய்ப்பொடி மற்றும் அவியல், சாம்பார் போன்ற வெங்சனங்கள் மிக பிரபலம்.

இன்றைய தேதியில் ஒவ்வொரு நவீன சந்தைப் பொருளுக்கும் ஒரு மினி உரு இருப்பதுபோல் அடைக்கும் மினிஅடை உருவமொன்று இருக்கிறது. அதுதான் தவலைஅடை [கீழே படம் காண்க]. நவீன பண்டங்களின் மற்றொரு அடையாளமான வெரைட்டியும் அடைக்குள்ளது. கோதுமை அடை, கேள்வரகு அடை [லோ ஃபேட் வெரைட்டி] போன்ற பலவித அடைகள் உள்ளன. மொத்தத்தில் காலங்காலமாக இருந்துவரும் ஒரு பண்டமானாலும் டாப்பிங்குகள், மினிசைஸ், வெரைட்டி போன்ற அம்சங்களால் நவீன யுகத்திற்கு ஏற்ற உனவுதான் அடை என்பதில் ஐயமில்லை.

அடையைப்பற்றி இன்னும் சில புள்ளி விவரங்கள்:
  • தோசை, இட்லி இவைகளை வார்க்கலாம், குத்தலாம் ஆனால் அடையை மட்டுமே தட்டலாம். :-D
  • காரடையான் நோன்பு என்று அடையின் முக்கியத்துவத்தை ;-) குறிக்கும் ஒரு சடங்கே உள்ளது. சிற்றுண்டி உலகில் அடைக்கு மட்டுமே இந்த பெருமையுண்டு.
  • அடைமொழி, அடை மழை போன்று தனிச்சிறப்பான பிரயோகங்கள் அடைக்கு மட்டுமே உண்டு.
ஆக அடையின் அடக்கத்தால் அடைக்கு அடக்கம் நடந்துவிடாது என்பது நிச்சயம். நவீன யுகத்தில் அடை இன்னும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாறும்நாள் வெகுதூரத்தில் இல்லை. இதனை மனதில்கொண்டு 2006ஆம் ஆண்டு அடையின் ஆண்டாக அனுசரிப்போம்.

* * * * * * * * * * * *

"டேய் எழுந்திருடா. என்னடா அடைக்கு ஊறப்போட்டுட்டு தூங்கிட்டையா? என்ன கனவுலகத்துல யாரப்பத்தி யோசனை?"

"ஹி..ஹி..எல்லாம் அடையை பத்திதான்!!!"

January 04, 2006

இந்திய நிலத்தடி நீர் => கோககோலாவிற்கு தடை

இங்கே மிஷிகன் பல்கலைகழகத்தில் கோக்கிற்கு தற்காலிக தடை. [ The Michigan Daily ] [Yahoo News] இந்தியாவில் கோககோலாவினால் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதாக நிலவும் சாடல்களை ஆதரித்து மற்றும் கொலம்பியாவில் அடியாட்களுடன் தொழிற்சங்கத்தின் அங்கத்தினரை நாசம் செய்வது போன்ற செயல்களை கண்டித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக இருந்தாலும் பாராட்டுக்குரியது. நம்மூரிலும் விழித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்! ஹும்ம்ம்ம்ம்ம்.....!