இந்த வாரம் 29வது தியாகராஜ ஆராதனை விழா கிலீவ்லண்டில் நிரைவுபெறுகிறது. ஆதலால் இந்த சனி, ஞாயிறு அங்கே செல்கிறேன், அளவான எதிர்பார்ப்புகளுடன். இரண்டு வருடம் முன்பு சென்றபோது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் மரத்தடியில். இதோ மீண்டும் அந்த கட்டுரை. [நன்றி: மரத்தடி.காம்].
கிலீவ்லாண்ட் அருமையான ஊர். இருபதுகளில் தட்பவெப்பம், ஏரிக்கரையில் இருப்பதால் மெல்லிய குளிர்காற்று. நமதவர்கள் குறைவில்லாத இடம். இந்த ஆராதனை தொடர்ந்து 26-ஆவது வருஷம் நடக்கிறது. சுகானுபவம். என்ன செய்தேன் போன வருடம், தெரியவில்லை.
பிரும்மாண்டமான அரங்கம். உள்ளே நுழைந்தவுடன் நிரம்பி வழியும் கூட்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. அரங்கத்தில் அருமையான சப்தம் சீராக வியாபித்திருக்கிறது (fantastic acoustics). கலைஞர்கள் எழுப்பும் ஒலியை மட்டும் தரும் துல்லியமான கம்பியற்ற ஒலிக்கருவிகள் (wireless mics etc...). வழ-வழவென்று மரத்தால் இழைத்த சுவர்கள். கூடவே மேலே உத்தரத்தில் எட்டு பிரும்மாண்ட உருளைகள் தொங்குகின்றன. இவை ஒலி எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் பிரதிபலிக்கப்பட்டு குவிந்துவிடாமலிருக்க அமைக்கப்பட்டிருந்தது. அரைவட்ட வடிவிலான மேடை, மேடை நோக்கி சார்பான மெத்தை இருக்கையமைப்பு (galary seating cushioned chairs) ரசிகர்கள் எந்த இடத்திலிருந்தும் மேடையை காண வசதியாக உள்ளது. மேடையின் பின்புறச் சுவரை வித வித அளவிலான புல்லாங்குழல்கள் அலங்கரிக்கின்றன. உத்தரத்திலிருந்து விளக்குகள் தற்கொலை செய்துகொல்லும் பாணியில் தொங்கிக்கொண்டு ஒளியைக் கொட்டுகின்றன. வித்வான்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கஷ்டமும் இல்லாத குளிர்வசதி. களைப்பில்லாமல் ரசிகர்கள் நாள்முழுதும் கச்சேரிகள் அநுபவிக்க இத்தனை அரங்க ஏற்பாடுகள்.
ஏற்பாடுகளை செவ்வன செய்திருக்கும் நிர்வாகத்தாரை பாராட்டியே தீரவேண்டும். கலைஞர்களை மட்டும் கவனிக்காமல் வந்திருக்கும் அனைத்து தரப்பினரையும் உபசரித்து விருந்தோம்பல் செய்தனர். முக்கியமாக சுந்தரம் மற்றும் நிர்வாக தரப்பினர் வித்வான்களை கௌரவித்த விதம் மனதை நெகிழ்வித்தது. இப்படியே செய்தால் இந்த ஆராதனை இன்னும் நூறு வருடங்களுக்கு கோலாகலமாக நடைபெறும்.
அரங்கமைப்பு மற்றும் இதர நிர்வாகங்களைப் போல் கச்சேரிகளும் சிகரத்தை தொட்டிருந்தால் இந்த வாரமும் சென்றிருப்பேன். ஒரு நாள் பந்தயத்தில் சச்சின் சதம் அடித்து கூடவே திராவிட், கங்கூலி, செஹ்வாக் அரை சதம் அடிப்பது போல் எதிர்பார்த்தால், சுதா மற்றும் லால்குடி முப்பது நாற்பதிலேயே ஆட்டமிழந்து ஸ்ரீகாந்தன் மட்டும் இந்த வயதிலும் அசாத்திய எண்பது அடித்த உணர்வே மிஞ்சியது.
வந்து குவிந்திருந்த மக்கள் ஏராளம். ஆண்களைவிட பெண்கள்கூட்டம் அதிகமாக தென்பட்டது (வயதுக் கோளாறு!). ஒரே பட்டுப்புடவை சலசலப்பு! நம்மவர்கள் எப்பொழுதும் போல் எளிமையாகக் குழாய் சட்டைகளில் பிரவேசித்தனர். குழந்தைகளின் ஆரவாரமும் குதூகலமும் நம்மை கவர்ந்திழுத்தது. "சுதா வெயிட் பொட்டிருக்கா.." போன்ற கச்சேரி வம்புகளுக்குக் குறைவில்லை. மொத்தத்தில் திருவிழாக் கோலம். ஓரு குறை. ரசிகர்களின் நாகரீகம் சில நேரங்களில் கீழ்த்தரமாகவே இருந்தது. அரங்கினுள் பானம் மற்றும் தின்பண்டங்கள் அனுமதியில்லை என்று அரங்கின் வாசலில் மற்றும் பல இடங்களில் தெளிவாக அறிவிக்கப்படிருந்தது. ஆனால் பலபேர் இதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தலைமைப் பாதுகாப்பு அலுவலர் தலையிட்டு அரங்கை மூடவிடுவேனென்று எச்செரிக்கை விடுத்தபின்தான் ஓரளவு குறைந்தது. கச்சேரி நடுவே கிசுகிசுப்பதும், கண்ட நேரத்தில் எழுந்துபோவதும், ஓரிடத்தில் உட்காராதீர்கள் என்று கேட்டுக்கொண்ட பின்பும் அவர் தலை மறைந்தபின் அங்கு ஆக்கிரமிப்பதும் மனதை ஏதோ செய்தன. மாபெரும் விழாவில் இந்த சின்ன நெருடல்களை, புலம் பெயர்ந்து வேறோர் சமூகத்தில் குடியிருக்கும் இவர்களின் இசை பிரியத்தை மனதில் கொண்டு மறந்துவிடலாம்.
மேற்கத்திய ராக் அண்ட் ரோலின் புகழ்பெற்ற ஹால் ஆஃப் ஃபேம் (Rock n roll- hall of fame) குடியிருக்கும் அதே கிலீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடப்பது இசையுலகில் அதன் பெருமையை மேலும் கூட்டுகிறது. வருடத்தின் இதே நேரத்தில் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தால் தவறாமல் காணவேண்டிய நிகழ்ச்சி இது. டிஸ்னிலாண்ட், நயாகரா பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். போன ஜென்மத்தில் ஒரு பசுமாடு தானம் செய்தால் ஒரு கச்சேரி காணும் பாக்கியம் கிடைக்குமேன்றால், நான் இரண்டரை மாடுதான் தானம் செய்திருக்கிறேன். இன்னுமொரு பத்து இருபது செய்திருக்கலாம்.
5 comments:
பாரதி, சௌக்கியமா? பாராட்டிற்கு நன்றி.
no review about this year's events?
பாலா, எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சு அப்படியே விட்டுட்டேன். சரி அப்படியே ஒரு பதிவு போட்றவேண்டியதுதான்.
யக்ஞா:
தாங்கள் கூறும் அத்துணை கச்சேரி குறைபாடுகளும் இங்கிருந்து (தமிழ் நாட்டிலிருந்து) அங்கு புலம் பெயர்ந்தவைதான். இங்கு அவை சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது போல், கச்சேரி வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்டது...
க்லீவ்லேண்ட் இசை விழாவை என் அமெரிக்கப் புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்யும் பட்டியலில் நான் அங்கு இருந்த வரையில் சேர்க்க இயலவில்லை.
போன ஜென்மத்தில் மாடு தானம் செய்யும் அளவு நான் தர்மர் இல்லை போலும். தருமியோ என்னவோ.
அரூண் வருகைக்கு நன்றி. நீங்க சொல்றது சரி. எனக்கு ஒன்னு புரியலை, இன்னும் ஏன் நம்மூர் கச்சேரிகளில் ஒரு professionalism இல்லை? இந்த வருஷம் ஆராதனை அனுபவமும் விரைவில் பதிக்க உத்தேசம். அடுத்த முறை இங்க வரும்போது வாய்ப்பு கிடைச்சா தவற விடவேண்டாம்.
Post a Comment